articles

img

தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?

எந்த ஒரு அறிவிப்பையும் பகட்டாக அறிவிக்கும் மோடியின் அரசு அதை அமல் படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் கொரோனா தொற்றால் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நாளதுவரை கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருப்பதாகும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரணமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்து ஓராண்டுகள் ஆகியும் ஒருவருக்கு கூட இந்த தொகை இன்றுவரை வழங்கப்படவில்லை. மோடிக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்த அஇஅதிமுக அரசும் இதுபற்றி ஏதும் கவலைப்படவில்லை, கண்டுகொள்ளவில்லை. 

1919ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் 2020 ஜனவரியில்  கண்டறியப்பட்டது, தொடர்ச்சியாக நாடு முழுவதும் தொற்று பரவ ஆரம்பித்து இறப்பும் தொடர்ந்தது. உலக சுகாதார நிறுவனம் தொற்றை பேரிடராக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகளை கேட்டுக்கொண்டது. அதன் விளைவாக இந்திய அரசு 2020 மார்ச் மாதம் மாநிலங்களுக்கு அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் இறப்பை பேரிடர் இழப்பாக கருதி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குடும்ப  நிவாரணமாக ரூ.4 இலட்சம் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை இந்திய அரசு அனுப்பியது. 

ஆனால் அந்த அறிக்கை பிறப்பித்த கையுடன் மாற்று அறிக்கை ஒன்றையும் மத்திய அரசு அனுப்பியது. அதில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிப்பது, தனிமைப்படுத்துவது, பரிசோதனை செய்வது போன்ற பணிகளும் நிவாரணப் பணிகளே என்றும் அதற்கு செலவிடப்படும் தொகையும் நிவாரணமாகவே கருதப்படும் எனவும் அறிவுறுத்திய ஒன்றிய அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மெளனம் சாதித்தது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் காரணமாகவே கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இப்போது நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. 

மோடியின் அரசு வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தையும் கொரோனா நிவாரணத்திட்டமாக மாற்றியிருக்கிறது. ஏற்கெனவே தாட்கோவில் வழங்கப்பட்டுவரும் கடன் தொகை கூட கொரோனா நிவாரணத்திட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரசி கோதுமையும் இதில் உள்ளடங்கும். கொரோனா தொற்றின் காரணமாக இறந்து போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறமுடியாது. அறிவித்த நிவாரணத்தை  வழங்காமல் இருக்க என்ன வழி என்பதை இந்திய அரசு தேடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் இறந்திருக்கும் சூழ்நிலையில் நிவாரணம் வழங்கப்படாமல் இந்திய அரசு மெளனம் சாதிப்பதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த ஆண்டு மே 24 ஆம் தேதி கோடை விடுமுறை சிறப்பு அமர்வில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். 

இந்த வழக்கின் விசாரணையின்போதுதான் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்ன செய்தீர்கள் என நீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. இதையடுத்து அவசர அவசரமாக ஒன்றிய அரசு ஆதரவற்ற குழந்தைகளுக்கு திட்டத்தை அறிவித்தது. ரூ.4 லட்சம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசு பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசு வழக்குரைஞர்,  கால அவகாசம் கேட்க இந்த வழக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

கட்டுரையாளர் : ஈரோடு க.ராஜ்குமார்

;